இம்பால்: கலவரம் பாதித்த மணிப்பூரில் முதல் முறையாக டிரோன் மூலமாக வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மணிப்பூரில் மெய்தி, குக்கி சமூகத்தினர் இடையேயான மோதல் கலவரமாக மாறி கடந்த ஒன்றரை ஆண்டாக அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போது கலவரங்கள் அடங்கிய நிலையில், முதல்வர் பைரன் சிங்குக்கு எதிராக குக்கி சமூகத்தினர் கங்போக்பியில் பேரணி நடத்திய அடுத்த நாளான நேற்று முன்தினம் இம்பாலின் மேற்கில் உள்ள கோட்ருக் கிராமத்தில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், வழக்கத்திற்கு மாறாக ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளும், டிரோன் மூலமாக வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண் உட்பட 2 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் மணிப்பூரில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும், டிரோன் மூலம் 5 குண்டுகள் வீசப்பட்டதாகவும் போலீசார் கூறி உள்ளனர். மேலும் உயர் தொழில்நுட்ப டிரோன்களை இயக்க பயிற்சி பெற்றவர்களாக அவர்கள் இருப்பதால், இந்த விவகாரத்தை மணிப்பூர் போலீசார் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.
இம்பாலின் மேற்கு மாவட்ட எல்லை முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை கமிஷனர் அசோக் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.