இம்பால்: மணிப்பூரில் நடந்த இனகலவரம் குறித்து நீதி ஆணையம் தனது விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று குகி சோ பழங்குடியின எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். மணிப்பூரில் கடந்த ஆண்டு நடந்த இனகலவரம் குறித்து விசாரிப்பதற்காக கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் அமைதி முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில் முதல்வர் பைரன் சிங் பேசுவதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆனால் இது முதல்வரின் குரல் இல்லை என்றும் போலி என்றும் அரசு மறுத்துள்ளது. இந்நிலையில் 10 குகி சோ பழங்குடியின எம்எல்ஏக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘நீதி ஆணையம் தனது செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும். முதல்வர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நீதி ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ள டேப்பில் இருந்து இன்னும் பல விஷயங்களை கேட்க முடியும். விசாரணையின் முடிவில் முதல்வர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.