மன்னார்குடி: மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்று வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் பரவியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இதை கண்டித்து பல்வேறு கட்சியினர், அமைப்புகள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திலும் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. மணிப்பூர் பலாத்கார சம்பவத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பலாத்கார குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். மணிப்பூரில் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காத பாஜ கூட்டணி அரசை கலைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.