இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு குக்கி மற்றும் மொய்தி இனத்தவரிடையே மோதல் வெடித்தது. இரண்டு ஆண்டுகளாக மோசமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததோடு உயிரிழப்புக்களும் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் தயாரானது. இதனை தொடர்ந்து முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அங்கு கடந்த பிப்ரவரி மாதம் குடியரசு தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜ முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜ எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் 9 எம்எல்ஏக்களுடன் ஆளுநர் அஜய்குமார் பல்லாவை நேற்று திடீரென சந்தித்துப்பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ தோக்சோம் கூறுகையில், மணிப்பூர் மக்களின் விருப்பப்படி புதிய அரசை அமைப்பதற்கு 44 எம்எல்ஏக்கள் தயாராக இருக்கிறார்கள். இதனை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். அரசை அமைப்பதற்கு உரிமை கோருவது பாஜ தலைமை முடிவு எடுக்கும். எனினும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பது அரசை அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு சமமாகும்\\” என்றார். 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தற்போது 59 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜ தலைமையிலான கூட்டணியில் 32 மொய்தி எம்எல்ஏக்கள், 3 மணிப்பூர் முஸ்லிம் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் 9 நாகா எம்எல்ஏக்கள் என மொத்தம் 44 பேர் உள்ளனர்.