டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2ம் நாளாக அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூரில் 3 பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரு அவைகளிலும் பேச வேண்டும் எனவும் விவாதம் நடத்த கோரியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
தான் பேசியதில் மணிப்பூர், பிரதமர் வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது ஏன்? என திரிணாமுல் எம்.பி. ஓ பிரையன் கேள்வி எழுப்பினார். பிரதமர், மணிப்பூர் ஆகியவை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளா? எனவும் கடுமையாக சாடினார். டெரிக் ஓ பிரையன் கேள்விக்கு பதில் அளிக்காமல் மாநிலங்களை தலைவர் அவையை ஒத்திவைத்துச் சென்றார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பம் காரணமாக மக்களவையை சபாநாயகர் ஓம்பிர்லா 12 மணி வரை வைத்துவைத்தார்.
இதேபோல் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தை அடுத்து மாநிலங்களவையும் பிற்பகல் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க மத்திய அரசு தயார் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவையை முடக்குகின்றனர் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.