டெல்லி: மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு 16 மாதங்களாக எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்டமாக தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டி மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;
“மணிப்பூர் மாநிலம் வன்முறையில் மூழ்கி 16 மாதங்கள் ஆகின்றன. ஆனால் உங்கள் ‘இரட்டை இயந்திரம்’ அரசாங்கம், அதனைத் தணிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அமைதி திரும்ப, இயல்புநிலையை உறுதிப்படுத்த அனைத்து சமூக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1.மணிப்பூர் முதல்வரை நீங்கள் ஏன் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை? அரசு இயந்திரத்தை கிட்டத்தட்ட முடக்கி, அருவருப்பான அறிக்கைகளை வெளியிட்ட குற்றவாளி அல்லவா அவர்? பதவி நீக்கம் நடந்துவிடாமல் தடுக்கும் நோக்கில், வெட்கமின்றி ராஜினாமா நாடகம் நடத்தியவர் அல்லவா அவர்?
2.நீங்கள் ஏன் இவ்வளவு இரக்கமற்று இருக்கிறீர்கள்? மணிப்பூருக்கு இதுவரை நீங்கள் செல்லாதது குறித்து ஏன் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்? உங்கள் ஈகோ காரணமாகவே, மணிப்பூரில் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்படுகின்றனர். திறமையற்ற, வெட்கமற்ற உங்கள் அரசால், அடிப்படையான சமாதான நடவடிக்கையை கூட தொடங்க முடியவில்லை!
3.இம்பால் மேற்கு மாவட்டத்தில் இப்போது ட்ரோன் மூலம் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ஆழ்ந்து தூங்குவது போல் தெரிகிறது. உங்கள் சொந்த பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களின் வீடுகள் கூட தாக்கப்படுகின்றன. நிவாரண முகாம்களின் மோசமான நிலைமைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதால்தான் மாநில ஆளுநர் நீக்கப்பட்டாரா?
குறைந்தது 235 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். 67,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பரிதாபமான நிலையில், நிவாரண முகாம்களில் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.
உள்நாட்டுக் கொந்தளிப்பைத் தவிர, இப்போது மணிப்பூரின் எல்லைகளில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலும் பெரிய அளவில் உள்ளது. மணிப்பூர் மக்களைப் பாதுகாப்பதில் நீங்கள் மோசமாகத் தவறிவிட்டீர்கள். இந்திய மக்களுக்கு நீங்கள் செய்த துரோகங்களின் நீண்ட பட்டியலில், மணிப்பூர் கொந்தளிப்பு முக்கியமானது” என கட்டமாக விமர்சித்துள்ளார்.