இம்பால்: இடஒதுக்கீடு தொடர்பாக மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் வன்முறை வெடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், வன்முறையின்போது குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இந்த வீடியோவை கண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறுகிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிட நேரிடும் என எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து, 2 இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹேராதாஸ் (32) என்பவரின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நெருக்கினர். ஹேராதாசின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தினர்.