டெல்லி: மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமித்ஷாவின் கோரிக்கையின் அடிப்படையில் மக்களவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசும்போது ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
ராகுல்காந்தியின் பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கண்டனம் தெரிவித்தார். இவர்களை தொடர்ந்து, ஒன்றிய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தான விவாதத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் அமித்ஷா பதில் அளித்தார். ஒன்றிய பாஜக அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களிடம் அச்சத்தை உருவாக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சமூகத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார். வன்முறையை விட்டுவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இரு சமூக மக்களுக்கும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அமித்ஷாவின் கோரிக்கையின் அடிப்படையில், மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மக்களவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.