மணிப்பூர்: மணிப்பூரில் அமைதி திரும்புவதாக பிரதமர் மோடி உறுதியளித்திருந்த நிலையில் அங்கு மீண்டும் நடத்த துப்பாக்கி சண்டையில் குக்கி சமூகத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். நாகா பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் உக்ருல் மாவட்டத்தின் தொவாய் கிராமத்தில் இன்று அதிகாலை மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர்.கிராமத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்டு அவர்களை தடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைவதற்குள் மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது. இச்சம்பத்தை உறுதி செய்துள்ள உக்ருல் மாவட்ட எஸ்.பி மெய்தி குக்கி பழங்குடியினரிடையே நீடிக்கும் மோதலால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் மெய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் இந்த வன்முறையில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே குறிப்பிட்ட அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்திருப்பதால் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றரை மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடிக்கும் மணிப்பூரில் அமைதி திரும்பி வருவதாக பிரதமர் உறுதியளித்திருந்த நிலையில் மீண்டும் வன்முறை வெடித்திருப்பது குக்கி சமூகத்தினரை கலக்கமடைய செய்துள்ளது.