அம்பை: மாஞ்சோலை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் மணிமுத்தாறு அருவியில் கடந்த 5 நாள்களாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அருவிக்கு நீர்வரத்து சீரானதை தொடர்ந்து இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக ஜூன் 14ம்தேதி சனிக்கிழமை முதல் சூழல் சுற்றுலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டு மணிமுத்தாறு அருவியில் குளிக்கவும், பார்வையிடவும் வனத்துறை தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது, அருவியில் நீர்வரத்து சற்று குறைந்ததால் ஜூன் 18ம்தேதியான நேற்று முதல் மணிமுத்தாறு அருவியைப் பார்வையிட மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.