சமூக சேவைகள் செய்வதில் தான் எனக்கு பெரும் ஆர்வம், சிறுவயது முதலே எனக்கு அதில் ஈடுபாடு அதிகம் தான் என்கிறார் சென்னை தி. நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான மணிமேகலை. பெண்கள் முன்னேற்றம், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு பிரச்சனையா உடனே களத்தில் இறங்கி போராடும் குணம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, தெரு கூட்டுபவர்களுக்கு என உதவி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் ஓடிச்சென்று உதவ வேண்டுமா? உடனே சென்று உதவி செய்கிறார் மணிமேகலை. இவை அனைத்தும் யாரிடமும் எந்த உதவியும் பெறாமல் தானே முன் நின்று சொந்த முயற்சியில் செய்கிறார் என்பது இவரது சிறப்பம்சங்கள். தலித் விமன் அமைப்பிற்கான சிறந்த சேவைகளை செய்கிறார் மணிமேகலை. மேலும் சமூக சேவைகளின் தலைவியான சிவகாசி IAS அவர்களின் தலைமையின் கீழ் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். சமூக சேவை செய்வதே வாழ்வின் லட்சியமாக வாழ்ந்து வரும் மணி மேகலை தனது சேவைகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
சமூக சேவைகளில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
எனது அம்மா அப்பா இருவருமே நன்கு படித்து நல்ல பணிகளில் இருந்தவர்கள் தான். இருவருக்குமே மற்றவர்களுக்கு உதவும் குணம் இருந்து வந்தது. அவர்களிடமிருந்தே எனக்கு சேவைகளில் ஆர்வம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனக்கு சிறுவயது முதலே மற்றவர்களுக்காக போராட வேண்டும் உதவ வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது. அரசு பணியில் இருந்த காலத்தில் என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவியிருக்கிறேன். பணி ஓய்வு பெற்ற பிறகு முழு நேரமாக சேவைகளில் இறங்கி விட்டேன். நான் சேவை செய்வதற்கு எனது குடும்ப உறுப்பினர்களும் மிக முக்கியமான காரணம் எனலாம். எனது இந்த குணத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பும் உதவியும் செய்து வருகிறார்கள்.
உங்கள் சேவை அமைப்பு குறித்து…
எனது சேவைகளை அட்சயா பவுண்டேசன் என்கிற அமைப்பின் மூலம் செய்து வருகிறேன். அது முழுக்க முழுக்க என்னுடைய மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பணத்தில் தான் செய்து வருகிறோம். வெளியாட்களிடம் ஏதும் பணம் பெறுவது கிடையாது. எனது சேவை அமைப்பின் மூலம் ஆறு அரசு பள்ளிகளை தத்து எடுத்து உதவிகள் செய்கிறேன். அதே போன்று இரண்டு அரசு மருத்துவமனையையும் தத்து எடுத்து உதவுகிறோம். இதை தவிர உதவி தேவைப்படும் அனைவருக்குமே ஏதேனும் உதவிகள் செய்து வருகிறேன். வெயில் காலங்களில்இலவச மோர் வழங்குவது, பெண் ஆட்டோ ஓட்டுனர்களை கௌரவிப்பது, தேவையான உதவிகளை செய்வது என எங்களது பணிகள் இருக்கும். ஒவ்வொரு வருடமும் என்னுடைய அறக்கட்டளை சார்பாக மோர் திருவிழா பல இடங்களில் நடைபெறும். எல்லாத் துறைகளிலும் பெண்கள் தங்கள் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இருந்தாலும் சில துறைகளில் இன்னும் கொஞ்சம் பின் தங்கி தான் இருக்கிறார்கள். அத்தகையில் இங்கு நோக்குகையில் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் 400 பேரை வைத்து சென்னையில் மகளீர் தின விழா கொண்டாடினோம். அவர்களது பணிகளை பாராட்டி விருதும் பரிசுகளும் வழங்கி கௌரவித்தோம். இதனை தவிர பலருக்கும் இலவச கவுன்சிலிங் கொடுத்து வருகிறேன்.
உங்கள் கவுன்சிலிங் அனுபவங்கள் குறித்து…
நான் எனது இளங்கலை பிஏ எகனாமிக்ஸ் படிப்பை குயின் மேரி கல்லூரியில் படித்தேன். பின்னர் அரசு பணியில் சேர்ந்து விட்டேன். எனது அரசு பணியில் 35 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உண்டு.அதன் பின்னர் எம் எஸ்ஸி கவுன்சலிங் மற்றும் சைக்கோதெரபி படித்து முடித்தேன். தற்போது ஏழை பெண்களுக்கு மற்றும் ஆலோசனை தேவைப்படும் பெண்களுக்கு இலவச கவுன்சிலிங் கொடுத்து வருகிறேன். அதே போன்று மாணவர்களுக்கு உளவியல் அவசியம் என்ற காரணத்தால் அரசு பள்ளிகளில் உளவியல் கருத்தரங்கள்மற்றும் உளவியல் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. உளவியல் ஆலோசகரான நான் MENTAL AWARENESS வகுப்பின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் எடுக்க அழைத்ததின் காரணத்திற்காக அந்த மாணவ , மாணவியர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள் வழங்கியும் வருகிறேன்.
விருதுகள் மற்றும் பாராட்டுகள்…
பெஸ்ட் இன்டர்நேஷனல் பிரசிடெண்ட் அவார்ட் 2001 ஆம் ஆண்டு பெற்றேன். கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் சொல்லின் செல்வி விருது 2005 ஆம் ஆண்டில் பெற்றேன். மாம்பலம் டைம்ஸ் இதழின் சிறந்த பத்து பெண்மணிகள் என்கிற விருதினை 2012ல் பெற்றேன். கார்பரேஷன் பள்ளி வழங்கிய அண்ணல் அம்பேத்கர் அவார்ட் பெற்றது என் வாழ்வின் பெரும் பாக்கியம் எனலாம். அதே போன்று சக்தி விருது, ஜெயகாந்தன் விருது , சிறந்த சேவை செம்மல் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மிக சமீபத்தில் துக்ளக் ரீடர்ஸ் குழு இவருக்கு சிறந்த சமூக சேவகிக்கான விருதினை வழங்கி கௌரவித்தது. இவரது சமூக சேவைகளுக்காக மேலும் பல விருதுகளும் பாராட்டுதல் களும் தற்போது வரை கிடைத்து வருவதே இவரது சீரிய பணிக்கு சான்று. அந்தந்த துறை சார்ந்த பிரபலங்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களையும் நடத்தி வருகிறார் சமூகசேவகி மணிமேகலை. மற்றவர்களின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என வாழ்ந்து வரும் மணிமேகலை அவர்களை வாழ்த்தி விடைபெற்றோம்.
– தனுஜா ஜெயராமன்.