*சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உஷார்…
கம்பம், ஜூன் 20: பழ வகைகளில், மா, பலா, வாழை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றது. இதில் மாம்பழம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பழமாக உள்ளது.
தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், வேலூர், திருவள்ளூர், தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மாம்பழம் விளைகிறது. இங்கு நீலம், தோத்தாபுரி (பெங்களூரா, கிளிமூக்கு), பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, ருமானி, சப்பட்டா, இமாம்பசந், காலப்பாடு, உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் விளைவிக்கப் படுகின்றன.
மாம்பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் முக்கிய பழ வகையாகும். ஏப்ரல் மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அனைத்து பழக்கடைகளிலும் மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.கம்பம் உழவர் சந்தையில் ரூ.30 முதல் ரூ.100 வரையும், அரசமரம்,வேலப்பர் கோவில், பகுதிகளிலும் மற்றும் கம்பத்தை சுற்றியுள்ள கே.கே.பட்டி,சுருளிப்பட்டி போன்ற ஊர்களிலும் மாம்பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் வகை வகையான இந்த மாம்பழங்களை மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் இவை இயற்கையாக பழுத்தது தானா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாம்பழங்கள் பெரும்பாலும் பறித்து 5 நாள் முதல் ஒரு வாரத்தில் பழுக்கும், அப்படி பழுத்ததை , சுவைத்தால் மட்டுமே அதனுடைய உண்மையான சுவை தெரியும். உடலுக்கும் நிறைய நன்மைகள் மற்றும் நார்ச்சத்து சென்றடையும்.
ஆனால் தற்போது கம்பம் நகரில் விற்பனையாகும் பெரும்பாலான மாம்பழங்கள் கார்ப்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்து சந்தையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இப்பொழுதெல்லாம் மக்களுக்கு இயற்கையாக பழுத்த பழத்தை உண்பதற்கு பொறுமை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்த கார்பைடு கல் வைத்தால் சுமார் ஆறு முதல் ஒன்பது மணி நேரத்தில் காய்கள் பழுத்துவிடும். இதை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்தப்பழங்களை வாங்கி உண்ணும் மக்களின் உடல் நலத்தை பற்றி வியாபாரிகள் கவலைப்படுவதில்லை.
அனுமதிக்கப்பட்ட முறை
முன்பெல்லாம் புகை மூட்டம் போட்டு மாங்காய்களை பழுக்கவைத்தது போய், இப்போது எத்திலின் திரவத்தை மாங்காய்களில் தெளித்து அவைகளை பழுக்க வைக்கும் முறையை இந்திய உணவு பாதுகாப்பு அனுமதித்துள்ளது. அதாவது மாமரத்தில் சுரக்கும் எத்திலின் என்ற ஹார்மோன் மூலம் தான் மாம்பழங்கள் மரத்தில் இயற்கையாக பழுக்கின்றன.
எனவே, அதே எத்திலின் திரவத்தை மாங்காய்களில் தெளித்து அவைகளை செயற்கையாக பழுக்க வைக்கும் முறைதான் இது. இந்த முறைப்படி 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி எத்தலில் திரவத்தை கலந்து அதனை மாங்காய்கள் மீது தெளித்து, அறையில் வைத்து பூட்டி வைக்கப்படும்.
அதில் இருந்து எத்தலின் வாயு வெளியேறி மாம்பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைத்துவிடும். (புகை மூட்டம் போட்டு பழுக்கவைப்பது போன்று) ஆனால், இந்த முறையில் மாம்பழங்கள் பழுக்க மூன்று நாட்கள் வரை ஆகும்.
இந்த முறையில் மாங்காய்களின் நிறம் மாறுவதுடன், சுவையும் அப்படியே இருக்கும். உடல் நலத்திற்கு எந்த தீங்கையும் விளைவிக்காது. இவ்வாறு பழுக்கவைக்க மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும் என்பதால், வியாபாரிகள் இதை பின்பற்றுவதில்லை.
கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கும் முறை
வெல்டிங் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு கல்லை சிறு துண்டுகளாக உடைத்து காகிதத்திலோ, பிளாஸ்டிக் பையிலோ சுற்றி மாங்காய்களுக்கு நடுவே வைத்துவிடுவார்கள். இந்த கால்சியம் கார்பைடில் இருந்து அசட்டலின் என்ற வாயு வெளியாகி மாம்பழத்தை பழுக்க வைக்கிறது. மாம்பழத்தின் நிறத்தை அது மாற்றும். தன்மையை கெடுத்துவிடும்.
அடுத்த ஆறு மணி நேரத்தில் மாங்காய்கள் அனைத்தும் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதுதான் செயற்கை கல் மூலம் பழுக்க வைக்கும் முறை. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி இது தடை செய்யப்பட்ட முறையாகும். இப்படி பழுக்க வைத்த பழங்களை அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழிப்பதும் உண்டு.
எப்படி கண்டுபிடிப்பது?
கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்ணை சுண்டியிழுக்கும் வகையில் இருந்தாலும் சுவை இருக்காது. பழத்தில் இனிப்பு இருக்காது. இந்த மாம்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி உண்டாகும். தொடர்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படும்.
வேதியியல் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது என்கின்றனர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள். கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை மக்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மாம்பழத்தின் மணம் இருக்காது. மாம்பழங்களின் மீது கறுப்பு புள்ளிகள் இருக்கும்.
மாம்பழங்களை தொட்டு பார்த்தால் சூடாக இருக்கும். தோல் மட்டும் பழுத்தது போல மஞ்சளாக இருக்கும். உள்ளே வெட்டி பார்த்தால் பழுத்திருக்காது, சுவையும் இருக்காது. மேலும் ஓருசில நாட்களில் கெட்டு போய்விடும். கல்வைத்து பழுக்கவைத்த பழம் தண்ணீரில் மிதக்கும்.
இயற்கையாக பழுத்த பழங்களில் கடைசியாகத்தான் காம்புப்பகுதி பழுக்கும். கல்வைத்து பழுத்த பழம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருக்கும். இதன் மூலம் இயற்கையாக பழுத்த பழங்களையும் கார்பைடு கல்வைத்த பழங்களையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ சத்து நிறைந்த மா, பழ வகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இயற்கையாக பழுத்த மாம்பழம் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதில்லை. ‘கார்பைடு கல்’ வைத்த மாம்பழம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்புண் ஏற்படும்.
அதனால் பொதுமக்களும் கல்வைத்த மாம்பழத்தை கண்டு வாங்காமல் ஒதுக்கிவிட வேண்டும். மேலும், மக்களின் உடல் நலத்தை பற்றி கவலைப்படாமல், கார்பைடு கல் மூலம் மாங்காய்களை பழுக்கவைத்து விற்பனை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.
தமிழகத்தின் பங்களிப்பு 4.5 சதவீதம்
உலகிலேயே அதிக அளவு மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. நாட்டின் மொத்த மா சாகுபடி பரப்பளவில், தமிழகத்தின் பங்களிப்பு 4.5 சதவீதம் என்றளவில் உள்ளது. தட்பவெட்ப மாறுதல்களைத் தாங்கி வளரக் கூடிய மாம்பழம், பழச்சாறு, ஊறுகாய் போன்ற பல வகை உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத்தை பிடிக்கிறது. தமிழகத்தில் உள்ள தோட்டக்கலைப் பண்ணைகளில் சுமார் 42 வகையான மாம்பழக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.