சென்னை: தமிழ்நாட்டில் மாம்பழக் கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சுமார் 1.46 லட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் பருவநிலை மா உற்பத்திக்கு உகந்ததாக அமைந்ததால் சராசரி மகசூலான எக்டருக்கு 5 முதல் 6 மெட்ரிக் டன் என்பது எட்டு மெட்ரிக் டன்னுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்த உற்பத்தி அதிகரிப்பினால் மாம்பழக்கூழ் தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதலுக்கு உகந்த பெங்களூரா ரகம், பதப்படுத்தப்படும் நிறுவனங்களால் விவசாயிகளிடமிருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயித்த பின்னரும் மாம்பழக்கூழ் உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத்துறை இயக்குநர், பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், மா பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் சென்ற ஆண்டின் மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், பதப்படுத்தும் நிறுவனங்களின் தேவை குறைந்துள்ளதாகவும், மா உற்பத்தி அதிகம் இருப்பதால், விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது எனதெரிவிக்கப்பட்டது.
மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை நியாயமான விலையில் உடனடியாக உழவர்களிடமிருந்து மா பதப்படுத்தும் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் கேட்டுக்கொண்டார். அதற்கு, மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆவன செய்வதாக தெரிவித்து மாம்பழக்கூழ் உற்பத்தியினை தற்போது ஆரம்பித்து உள்ளனர்.