சென்னை: மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு விளைவிக்கப்பட்ட மாங்காய் உற்பத்திக்கு, சந்தையில் மிகவும் குறைவான விலையே கிடைப்பதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் மாமரங்களை வெட்டுவதிலும், மாம்பழங்களை சாலைகளில் கொட்டி அழிப்பதிலும் ஈடுபடுகின்றனர்.
ஆந்திர மாநிலத்திலும் இதே பிரச்னையை விவசாயிகள் சந்தித்துள்ளனர். இச்சூழலில் ஆந்திர அரசு கிலோ ஒன்றுக்கு ரூ.8 என்று விலை நிர்ணயித்து, ரூ.4 ஐ மானியமாக வழங்கி ஒரு கிலோவுக்கு ரூ.12 கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோன்று தமிழக அரசு, மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.