‘‘சேலத்துக்காரருக்காக திடீர் யாகம் நடத்தினார்களாமே நிர்வாகிகள்..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் சேலத்துக்காரருக்காக இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திடீர் யாக வேள்வி நடத்தியுள்ளார்களாம். இதில், சேலத்துக்காரரின் ‘நெருங்கிய நண்பர் ஒருவர்’ கலந்து கொண்டாராம். யாக வேள்வி பூஜைகளை அனைத்தையும் அந்த நெருங்கிய நண்பர் கவனித்து கொண்டாராம்.
இதில், மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றார்களாம். முக்கியமாக, உயர் பதவிக்காக ஹோமமும் நடந்ததாம். இந்த யாக வேள்வி பூஜை நடத்தியது ரகசியமாக வைக்கப்பட்டதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோஷ்டிப்பூசல் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது போல..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘லிங்க சாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட இலைக்கட்சியில் ஏற்கனவே மாஜி மீசைக்காரரும், சிட்டிங் எம்எல்ஏவும் இரு கோஷ்டிகளாக அரசியல் செய்து வருவது ஊரறிந்த விஷயம்.
இதுபோதாதென்று தற்போது மாவட்டத்தில் தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர் ஆனது போல, ஆங்காங்கே முட்டல், மோதல்களுக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டதாம். கோஷ்டி மோதலின் உச்சகட்டமாய் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, இலைக்கட்சியின் நகர முக்கிய பிரமுகரான அரசன் பெயர் கொண்டவர், சிட்டிங் எம்எல்ஏவின் தீவிர ஆதரவாளர். கட்சி மாஜி தலைவி பேரவையின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர், மீசை மாஜியின் நெருங்கிய ஆதரவாளர்.
சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில், ‘என் பெயரை எப்படி வாசிக்காமல் புறக்கணிக்கலாம்’ எனக்கூறி, நகர பிரமுகரிடம், பேரவை நிர்வாகி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு விடாமல் சிட்டிங் எம்எல்ஏதான் இதற்கு காரணமென கூறி, அவரது காரையும் வழிமறித்து நியாயம் கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத சிட்டிங், இதற்கெல்லாம் மாஜி மீசைக்காரர் தான் காரணம் என புலம்பியபடி சென்றாராம். மாவட்டத்தில் மீசை – சிட்டிங் பஞ்சாயத்து அடுத்தடுத்த லெவலிலும் மோதல் போக்காக இருப்பது இலைக்கட்சி நடுநிலையாளர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பொதுமேடையிலே அதிருப்தியை வெளியிட்டாராமே புல்லட்சாமி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் தாமரை அணியில் தொடர விருப்பம் இல்லாததை புல்லட்சாமி அவ்வப்போது பொதுவெளியில் சூசகமாக பேசுகிறாராம். மாநில பவர்புல் நிர்வாகியை மாற்ற வேண்டுமென ஒன்றிய அமைச்சரிடமே முறையிட்டிருந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தையும் சிரித்தபடி புறக்கணித்து விட்டாராம். இதனால் தாமரை தரப்பு கடும் அப்செட்டில் உள்ளதாம்.
உயர்மட்ட அதிகாரிகள் மதிப்பதில்லை என்ற புலம்பல் ஏற்கனவே புல்லட்சாமியிடம் எழுந்திருக்க, தற்போது பொதுத்துறை பால் நிறுவனத்தில் ஊழியர்களில் பாதி பேர் வேலையே செய்வதில்லை என்ற புரியாத புதிரை அரசு விழா மேடையில் வெளிச்சம் போட்டாராம். தவறுகளை தடுக்க வேண்டிய நபரே இப்படி புலம்பினால் எப்படி என்ற எதிர்மறை விமர்சனங்கள் கட்சிகளிடமும், பொது அமைப்புகளிடமும் எழுந்துள்ளதாம். இதுமட்டுமின்றி அரசு நிர்வாகம் களஆய்வு மேற்கொண்டு உடனே முறைப்படுத்த வேண்டுமென்ற கோஷங்கள் பரவலாகி வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாம்பழ கட்சி நிறுவனருக்கு எதிராக அந்த கட்சியோட மக்கள் பிரதிநிதி இருக்காராமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டியில சர்ச்சைக்கு பெயர்போன விசி, கடந்த வாரம் ஓய்வு பெற்றாரு. ஆனாலும் விதிகள மீறி, தனது ஆதரவாளர் ஒருத்தர விசியா நியமிச்சுட்டு போயிட்டாரு. பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அவர, விசி பொறுப்புல இருந்து நீக்கணும்னு தொடர் போராட்டம் நடந்துகிட்டு வருது. இந்த விவகாரத்துல ஆரம்பம் முதலே தொழிலாளர்களுக்கு ஆதரவா இருக்குற மாம்பழ கட்சி நிறுவனரு, இந்த முறைகேடான விசி நியமனத்தையும் ரத்து செய்யணும்னு காட்டமா அறிக்கை விட்டிருக்காரு.
கட்சி நிறுவனரு விசி.,க்கு எதிரா போர்க்கொடி தூக்கியிருந்தாலும், மாம்பழ கட்சியோட மக்கள் பிரதிநிதி ஒருத்தரு, பொறுப்பு விசிக்கு முழு ஆதரவா இருக்காராம். விசிய அதே பொறுப்புல தொடர வைக்க முடிவு செஞ்ச அவரு, கைலாசநாதர் கோயில் பகுதியைச் சேர்ந்த தனது ஆதரவு காண்ட்ராக்டரோட, பொறுப்பு விசிய சம்பந்தப்பட்ட மினிஸ்டர் ஆபிசுக்கு அனுப்பி வச்சாராம். ஆனா அரசு சட்டப்படி தன்னோட கடமைய செய்யும்னு பதில் வந்ததால, அடுத்து என்ன செய்யலாம்னு தீவிர ஆலோசனையில இருக்காங்களாம்.
கட்சி நிறுவனரு வெளிப்படையா எதிர்க்க, அதே கட்சியோட மக்கள் பிரதிநிதி மறைமுகமா சப்போர்ட் செய்யுறது தான் யுனிவர்சிட்டியில இப்போ ஹாட் டாப்பிக்கா இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கொடுத்தால்தான் பைல்களை கையிலே வாங்கும் அதிகாரி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகராட்சி 27வது வார்டு உதவி அதிகாரியாக பணியாற்றி வரும் கீர்த்தியானவர் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கொடுத்தால்தான் பைல்களை கையிலேயே வாங்குகிறாராம்.
பேப்பர் எல்லாமே சரியாத்தானே இருக்கு எதுக்கு லஞ்சம் கொடுக்கனும்னு சட்டம் பேசினா பின் விளைவுகள் கடுமையா இருக்குமாம். லஞ்ச விவகாரத்துல அதிகாரி எதிலும் தலையிடுவது இல்லையாம். கையெழுத்து போடுவது மட்டும்தான் அவரோடு வேலையாம். மத்த எல்லா வேலையும் அதிகாரியோட மருமகன்தான் கச்சிதமா பார்த்துக்கொள்கிறாராம். அதனால அதிகாரியைவிட மருமகனுக்குதான் வார்டு பகுதியில் மவுசு அதிகமாம். லஞ்சம் கொடுக்கலைன்னா எக்காரணம் கொண்டும் பைல் மூவ் ஆகாதாம்.
அதையும் மீறி மேலிட பரிந்துரையில் வந்தால் அப்போதைக்கு கையெழுத்து போட்டுவிடுவாராம். ஆனா பணிகள் நடக்கும்போது அதிகாரி வெச்சு செய்வாராம். அதாவது கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டியது, போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடு என என்னென்ன விதிமீறல் இருக்கிறதோ அத்தனைக்கும் சேர்த்து அபராதம் போட்டு வசூல் செய்துவிடுவாராம். அதனால கட்டிட அனுமதிக்கு யார் போனாலும் கேள்வியே கேட்காம கேட்கிற லஞ்சத்தை சத்தம் இல்லாம கொடுத்திட்டு வந்துவிடுகிறார்களாம்.
அதேபோல மாநகராட்சி ஒப்பந்த பணிகளை பினாமி பெயர்களில் எடுத்து அவரே வேலை செய்து வருவதாகவும் உதவி அதிகாரி மீது புகார் சொல்றாங்க. தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி நிறைய டெண்டர் பணிகளை எடுத்து செய்வதால் உண்மையான ஒப்பந்ததாரர்கள் வேலை கிடைக்காம புலம்பிகிட்டு இருக்காங்க. இந்த புகார் பத்தி அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினாங்களாம். அப்போது விசாரணை செய்த அதிகாரியையே மிரட்டும் தொனியில் பேசியதாக சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.