திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு மாம்பழ ஜூஸ் வழங்கவேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு பரிந்துரை செய்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேளாண்மைதுறையின் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளை இழப்புகளிலிருந்து பாதுகாக்க, உலகளாவிய மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரத்துடன் இணைந்த அறிவியல் ரீதியாக பயிர் திட்டமிடலுக்கு வேளாண்மைதுறை அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கவேண்டும். பொருத்தமான பயிர்கள் மற்றும் சாகுபடி செய்ய ஊக்குவிக்கவேண்டும்.
மாம்பழ விவசாயிகள் போதிய ஆர்டர்கள் இல்லாததால், மாம்பழக்கூழ் கொள்முதல் மந்தமாகியுள்ளது. இதனால் மாம்பழ விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கூழ்பதப்படுத்தும் நிறுவனங்கள் உடனடியாக கொள்முதலை மீண்டும் தொடங்குவதை உறுதி செய்யவேண்டும். சித்தூர் மாவட்டத்தில் 4 லட்சம் மாம்பழ விவசாய குடும்பங்கள் உள்ளன. எனவே மாம்பழ நிறுவனங்கள் அதிகளவு மாம்பழங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அப்போது அதிகாரிகள், மாம்பழம் பழைய கையிருப்பு மற்றும் கூழ் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன்கள் இல்லாதது, புதிய ஸ்டாக்கை வாங்குவதற்கான திறனை மட்டுப்படுத்தியுள்ளது என்றனர்.
இதையடுத்து தொழிற்சாலைகளுக்கு வங்கிக்கடனை அதிகரித்து, நடைமுறையை எளிதாக்க முதல்வர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், மாம்பழ கூழ் தொழிற்சாலையில் உற்பத்தியை ஊக்குவிக்கவேண்டும், மாம்பழ கூழ் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். அதேபோல் தூய பழச்சாறுகள் மீதான 40 சதவீத ஜிஎஸ்டி மாம்பழ தேவையை பாதித்துள்ளது. மத்திய ஜிஎஸ்டி குறைப்பு கோரவேண்டும். மாம்பழ நுகர்வை அதிகரிக்க, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தில் மாம்பழச்சாறு விநியோகிக்கவேண்டும். திருமலையில் தேவஸ்தானம் மூலம் அன்னதானத்தின்போது, பிரசாதமாக மாம்பழ ஜூஸ் வழங்கவேண்டும் என்றார்.