சென்னை: மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பை நிறைவேற்றிடும் வகையில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: வட மாநிலத்தில் தான் ரூ.100 கோடி, ரூ.200 கோடி மதிப்பில் என்று குடமுழுக்கு நிதியை கேள்விப்பட்டிருப்போம். தமிழ்நாட்டில் முதன்முதலில் ரூ.400 கோடி அளவிற்கு பெருந்திட்ட வரைவு பணிகளின்கீழ் திருச்செந்தூரில் பணிகளை மேற்கொண்டது ஆட்சி திமுக ஆட்சி. அந்த கோயில் மட்டுமல்லாது பழனி, சமயபுரம், பெரியபாளையம், சிறுவாபுரி, திருத்தணி, வயலூர் கோயில்கள் உட்பட 19 கோயில்களுக்கு ரூ.1700 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சீமானுக்கு மறதி அதிகம். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மருதமலை கோயிலிலும் தமிழில்தான் குடமுழுக்கு நடைபெற்றது. வயலூர் முருகன் கோயிலில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அர்ச்சகரை வேள்வி குண்டத்திலே அமர்ந்து மந்திரங்களை ஓதியதோடு மட்டுமல்லாமல் குடமுழுக்கு நாளன்று கோபுர கலசத்திற்கு அவரையும் கொண்டு புனித நீரை ஊற்றிய பெருமை இந்த ஆட்சியை சாரும். ஆகவே சீமான் போன்றவர்களின் உபதேசத்தால் இந்த ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மண்டல இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர்கள் சித்ராதேவி, ஜெயா, உதவி ஆணையர் கார்த்திகேயன், கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி ஆர் சீனிவாசன், மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.