நடப்பாண்டில் ஒரு டன் ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை விளைச்சல் அதிகரிப்பால் மாம்பழம் விலையில் கடும் வீழ்ச்சி
கோவில்பட்டி: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் விளைச்சல் அதிகரித்திருப்பதால் மாம்பழம் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னர் ஒரு டன்னுக்கு ரூ.20 ஆயிரம் வரை விற்பனையான மாம்பழத்திற்கு தற்போது ரூ.4 ஆயிரம் மட்டுமே விலை கிடைப்பதால் வேதனைபடும் விவசாயிகளும், மரங்களை குத்தகைக்கு எடுத்தவர்களும் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்து மாம்பழம் என்று போற்றப்படும் மாம்பழ வகைகள் இந்த மாவட்டத்தில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. நடப்பாண்டில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகமாக இருந்ததால், வழக்கத்தை விட சற்று கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நினைத்திருந்த விவசாயிகளுக்கு மாம்பழ விலை வீழ்ச்சியால் பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது.
கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.15ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4 ஆயிரம் ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது. பல இடங்களில் இந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வணிகர்களோ, மாம்பழக்கூழ் ஆலைகளோ முன்வரவில்லை. ஒரு டன் மாம்பழத்தை ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைக்காது. மாறாக ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக இழப்பு ஏற்படும். இந்த இழப்பை விவசாயிகளால் தாங்கிக் கொள்ள முடியாது.
மாம்பழ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மட்டுமின்றி, மாமரங்களை குத்தகைக்கு எடுத்து மாம்பழங்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்யும் குத்தகைதாரர்களும், சிறு வணிகர்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கடுமையான வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகளும், சிறு வணிகர்களும் பெரும் இழப்பை சந்தித்தனர். நடப்பாண்டில் மாம்பழங்கள் நல்ல விலைக்கு விற்பனையானால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்பை நடப்பாண்டில் ஓரளவாவது சரி செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை விலை வீழ்ச்சி பேரிடியாக தாக்கி உள்ளது.
மாம்பழங்களின் விலை வீழ்ச்சிக்கு உற்பத்தி அதிகரிப்பு மட்டுமின்றி, மேலும் பல காரணங்களும் கூறப்படுகின்றன. சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதால் அவை மாம்பழங்களை கொள்முதல் செய்ய மறுப்பது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் புதிதாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகியவையும் சிக்கலுக்கு காரணம் ஆகும்.
இந்த சிக்கல்களை சரி செய்ய வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை ஆகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை நடப்பாண்டில் எந்த பயிரும் விளைச்சலுக்கு குறைவில்லை. ஆனால், இப்போது விலை வீழ்ச்சியைத் தடுக்காததால் மாம்பழ விவசாயிகள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக மாம்பழ விவசாயிகள், வணிகர்கள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகளின் உரிமையாளர்களை அழைத்துப் பேசி மாம்பழங்களுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மாம்பழங்கள் மற்றும் மாம்பழக்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அகற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


