குன்றத்துார்: மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாங்காடு பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் அருகே அதன் உபகோயிலான வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. தொண்டை மண்டல நவகிரக ஸ்தலங்களில் புதனுக்குரிய சுக்கிரன் பரிகார ஸ்தலமான இக்கோயில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கோயிலில் கும்பாபிஷேகம் விழா இந்து அறநிலையத்துறை சார்பில் நடந்த முடிவு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, கோயில் பிரகாரத்தை சுற்றிலும் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கருங்கற்கள் தரை அமைக்கப்பட்டது. மேலும், கோயிலில் உள்ள அனைத்து விமானங்களும், பரிவார சன்னதிகளும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய வண்ணம் தீட்டப்பட்டு திருப்பணிகள் யாவும் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. இதனையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், அதிகாலை 5 மணிக்கு நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோயில் கோபுரத்தின் மேல் விமானத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த கலசத்தின் மீதும், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உபசன்னதி கோபுரங்களில் உள்ள கலசங்களிலும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஓம் நமசிவாய’ என்ற கோஷம் விண்ணை முட்ட சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா முடிந்த நிலையில் அங்கிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர், வெள்ளீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில், வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் உதவி ஆணையர் கவெனிதா மற்றும் கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணிகளில் மாங்காடு போலீசார் ஈடுபட்டனர்.