லண்டன்: ஐசிசி டி20 மகளிர் பேட்டிங் தர வரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். கடந்த ஜூன் 28ம் தேதி, இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டிக்கு தலைமை தாங்கி ஆடிய இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 62 பந்துகளில் 112 ரன் குவித்து சாதனை படைத்தார்.
அவரது அதிரடியால் அப்போட்டியில் இந்திய அணி 97 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஐசிசி டி20 மகளிர் பேட்டிங் தரவரிசை பட்டியலில், ஸ்மிருதி மந்தனா ஒரு நிலை முன்னேறி 3ம் இடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில், மந்தனாவின் வாழ்நாள் சாதனையாக 771 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார்.
பட்டியலில் ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி 794 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேலி மாத்யூஸ் 774 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். தவிர, இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் மாற்றமின்றி 12வது இடத்திலும், ஷெபாலி வர்மா ஒரு நிலை முன்னேறி 13ம் இடத்திலும் உள்ளனர். மந்தனா, ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.