திருவனந்தபுரம்: சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷத்துடன் கார்த்திகை 1ம் தேதியான நேற்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் கோயில் நடையை திறந்தார். அதன் பிறகு புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை மேல்சாந்தியாக மகேஷும், மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தியாக முரளியும் பொறுப்பேற்று கொண்டனர். கார்த்திகை மாதம் 1ம் தேதியான நேற்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி மகேஷ் சபரிமலை கோயில் நடையை திறந்தார். தொடர்ந்து மாளிகைப்புரம் கோயில் நடையை மேல்சாந்தி முரளி திறந்தார். கார்த்திகை மாத முதல் நாளான நேற்று ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, கேரள தேவசம் போர்டு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் தரிசனம் செய்தனர்.
அதிகாலையில் கணபதி ஹோமத்திற்கு பிறகு 3.30 மணியளவில் இந்த மண்டல காலத்தின் முதல் நெய்யபிஷேகம் தொடங்கியது. தினமும் காலையில் 3.30 முதல் 7 மணி வரையும், பின்னர் 8 மணி முதல் 11.30 மணி வரையும் நெய்யபிஷேகம் நடைபெறும். காலை 7.30 மணிக்கு உஷ பூஜையும், நண்பகல் 12 மணிக்கு 25 கலச பூஜைக்கு பின்னர் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெற்றன. இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடி 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.