மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ரோஸ்மேரி, ஜான்கென்னடி, புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை நிர்வகிக்கும் பிபிடிசி நிறுவனம், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறுவது ஏற்புடையதல்ல.
குத்தகை காலம் 2028ம் ஆண்டு தான் முடிகிறது. தற்போது பிபிடிசி நிறுவனம், தொழிலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. மறுகுடியமர்வு செய்யும் வரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வௌியேற்ற கூடாது என்றும், அவர்களுக்கு குடிநீர், மின்வசதி ஆகியவற்றை பிபிடிசி நிறுவனம் சார்பில் நிறுத்தி வைக்கக் கூடாது. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை ஆக. 29க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.