மண்டபம்: மானாங்குடி கடலில் கரையோரங்களில் வளர்ந்துள்ள பாறைகளை அகற்றினால் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். இங்கு சிறிய மீன்பிடி இறங்கு தளம் அரசு அமைத்து தர நாட்டு படகு மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மானாங்குடி ஊராட்சியில் குறைந்தபட்சம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வசித்து வருபவர்கள் பெரும்பான்மையானோர் மீனவர்கள். மேலும் மானாங்குடி கிராமத்திலிருந்து கடற்கரை வரை தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மானாங்குடி பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நீண்ட தொலைதூரத்தில் அழகான மணல் பரப்பில் காணப்படும். இந்த கடற்கரையானது கரையின் ஓரத்திலே பாறைகள் அதிகமாக வளர்ந்து இருப்பதால், வசிக்கக் கூடிய பொதுமக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாமல் தவிர்த்து விட்டனர்.
இப்பகுதியில் வசிக்கக் கூடிய மீனவர்கள் பெரும்பான்மையானோர் மண்டபம்,பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை, ஏர்வாடி, உச்சிப்புளி, புதுமடம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அன்றாட கூலி தொழிலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த பகுதிகளில் கடல் பரப்பு இருந்தும் அங்கு பாறைகள் அதிகமாக வளர்ந்துள்ளதால், சொந்தமாக மீன்பிடித் தொழில் ஈடுபட முடியவில்லை. இதனால் 500 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பின்னோக்கி உள்ளது. அதனால் இந்த மானாங்குடி தென்கடலோரப் பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி குறிப்பிட்ட தொலைதூரத்திற்கு பாறைகளை அகற்றி கொடுத்தால் இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வெளியூர்களுக்கு மீன்பிடிக்க செல்லாமல் சொந்தமாக நாட்டுப் படகு வைத்து மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
மேலும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், ஊராட்சியின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடவும் தென் கடலோரப் பகுதியில் மீன்பிடி இறங்கு தளம், சிறிய துறைமுகம் மற்றும் மீன்கள் விற்பனை கூடம் அமைக்க வேண்டும். இந்த பகுதியில் மீன்பிடி தொழிலை துவங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்திய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் மீன் பிடித்து தொழிலை உருவாக்க அரசு முன் வரும் பட்சத்தில் மானாங்குடி ஊராட்சி மற்றும் அருகேயுள்ள நொச்சுயூரணி ஊராட்சியை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடும்பங்களும் இந்த மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை பெருகிடவும் ஒரு வாய்ப்பும் ஏற்படும். ஆதலால் இந்த தென்கடலோர பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீன்பிடி தொழிலை உருவாக்குவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பத்மநாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கடல் சூழ்ந்த ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடலோர பகுதியில் வசிக்கக் கூடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அரசு மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தி வருகிறது. கடலோர பகுதியில் மீனவர்களுக்கு மானிய வகையில் நாட்டுப் படகு வழங்குதல், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி வலைகள் வழங்கப்படுகிறது. மேலும் கடலில் வாழக்கூடிய உயிரினங்களை பாதுகாத்தல், மீனவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஒரு பக்கம் மீன்களை பிடித்து வருவது, மற்றொரு பக்கம் கனல் பாசி வளர்ப்பது போன்ற இயற்கையான சூழ்நிலைகளுக்கு பல கோடி ரூபாய் மானியங்களாக கடன் வழங்கி பல மீன்வளம் சார்ந்த தன்னார்வு அமைப்புகள் மூலம் மீனவர்களை ஊக்குவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மானாங்குடியில் அமைந்துள்ள தென் கடலோரப் பகுதியில் மீன்பிடி தொழிலை துவங்குவதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவ மக்களின் கோரிக்கையாகும்.