*உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அறந்தாங்கி : மணமேல்குடி அருகே மயானகரைக்கு சாலை வசதி இல்லாததால் ஆற்றுக்கு குறுக்கே தண்ணீரில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் நிலை உள்ளது. எனவே மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா இடையாத்திமங்கலம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த பகுதி பொதுமக்களுக்கு மயான கரைக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. யாரேனும் இப்பகுதியில் இறந்தால் அவரது உடலை கிராமத்தின் அருகே உள்ள கண்மாயின் குறுக்கே எடுத்து சென்று அடக்கம் செய்வது வழக்கம்.
அதேபோன்று மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் நிரம்பி விட்டால் வயல்வெளிகளில் 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஞானாம்பாள் (85) என்பவர் இயற்கை மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் உள்ள கண்மாய் அதன் முழு கொள்ளளவை அடைந்து உபரி நீர் சருக்கை வழியாக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் ஞானாம்பாளின் உடலை எடுத்துச் செல்ல உரிய பாதை இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் ஆற்றுக்கரையில் சேரும் சகதியில் நடந்து, கண்மாயின் மிகவும் சிரமத்துடன் இடுப்பளவு தண்ணீரில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர். கடந்த 5 தலைமுறைக்கும் மேலாக இதே நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தங்கள் பகுதி மக்கள் மயானக்கரைக்கு செல்ல முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அடுத்த சம்பவத்தின் போது இறந்த உடலை அடக்கம் செய்வதற்கு பதிலாக கிழக்கு கடற்கரை சாலையில் சடலத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளனர்.