*அகற்ற கிராமத்தினர் கோரிக்கை
மானாமதுரை : மானாமதுரை பனிக்கனேந்தல் கண்மாய் பகுதி முழுவதும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளால் நிரம்பியுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை கன்னார்தெருவில் இருந்து மூங்கில் ஊரணி செல்லும் வழியில் பனிக்கனேந்தல் கண்மாய் உள்ளது.
மானாமதுரை நகருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாகும் மதுபான பாட்டில்கள் மற்றும் வீசி எறியப்படும் பாலீத்தின் குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளால் கண்மாய் மடை, நீர்ப்பிடிப்பு பாதைகள் குப்பை மேடாக மாறியுள்ளது. இதனால் கண்மாயில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
மேலும் கால்நடைகள், இந்த பாலீத்தின் குப்பைகளில் உள்ள உணவுகளை சாப்பிட்டு குடற்பகுதியில் தேங்குவதால் ஜீரணமண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முனியராஜ் கூறுகையில், பனிக்கணேந்தல் கண்மாயில் மது பாட்டில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களும் நிறைந்துள்ளது.
இதன் காரணமாக பணிக்கணேந்தல் கண்மாய்க்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றாலும், விவசாயத்திற்கு பயன்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை போராட்டம் நடத்தி, இங்குள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புக் கொண்டும் தற்போது வரைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.