Friday, April 19, 2024
Home » மனம் சார்ந்த தடைகளை தகர்த்தெறியுங்கள்!

மனம் சார்ந்த தடைகளை தகர்த்தெறியுங்கள்!

by Porselvi

ஒரு இளம் பெண் தன் பெற்றோரிடம் தினமும் புலம்பிக்கொண்டிருந்தாள்.ஒரு பிரச்னை முடிகிறது என்று நிம்மதியாக இருக்க நினைத்தால், உடனே அடுத்த பிரச்னை தொடங்கிவிடுகின்றது என்று கவலைப்பட்டாள்.பெற்றோர்கள் ஆறுதல் சொல்லியும் அவள் மனம் அமைதி அடையவில்லை. புலம்பிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவளது தாய் சமையலறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மூன்று பாத்திரங்களை எடுத்து அதில் பாதித் தண்ணீரால் நிரப்பி விட்டு, ஒன்றில் சில கேரட்டுகளைப் போட்டார்.மற்ற ஒன்றில் இரண்டு முட்டைகளைப் போட்டார். மூன்றாவது பாத்திரத்தில் காபித்தூளை போட்டார்.மூன்று பாத்திரங்களை மூன்று அடுப்பில் வைத்துக் கொதிக்கவைத்தார். சிறிது நேரம் அவை கொதித்து முடிந்ததும், மூன்று பாத்திரங்களையும் வெளியே எடுத்து வைத்தார் அந்த தாய். முதல் பாத்திரத்தில் இருந்த கேரட் துண்டுகளைத் தொட்டுப் பார்க்குமாறு மகளிடம் சொன்னார்,அவள் அதை தொட்டுப் பார்த்தபோது அது வெந்து மிகவும் மிருதுவாக இருந்தது.இரண்டாவது பாத்திரத்தில் வேக வைத்த முட்டைகளைத் தொட்டு பார்க்கச் சொன்னார். மகள் அவற்றை தொட்டுப் பார்த்தபோது அது கடினமாக இருந்தது. மூன்றாவது பாத்திரத்தில் தொடுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அங்கு இருந்த காபி தூள்கள் தண்ணீரில் கரைந்து வாசனை தந்து கொண்டு இருந்தது. மகள் அந்த வாசனையை முகர்ந்து பார்த்தாள்.

தாய் சொன்னார் கேரட்டுகள், முட்டைகள்,காபிதூள் மூன்றும் ஒரே நிலையில் தண்ணீரில் போடப்பட்டன. ஆயினும் இவை அவற்றின் தன்மையிலும்,தண்ணீரோடு இணைந்து செல்வதிலும் வித்தியாசப்படுகின்றன. முதலில் கடுமையாக இருந்த கேரட்டுகள் மென்மையாகி விட்டன.மென்மையாக திரவமாக இருந்த முட்டைகள் கடுமையாகி விட்டன. நடுநிலையில் இருந்த காபி தூள் தண்ணீரில் கலந்துவிட்டன.எனவே பிரச்னைகள் வருகின்றபோது அந்தப் பிரச்னைகளை நீ எந்த மனநிலையில் பார்க்கின்றாய் என்பதைப் பொருத்தும் எந்த வகையில் செயல்படுகிறாய் என்பதைப் பொருத்தும் அதன் விளைவுகள் உன்னால் உணரப்படுகின்றன. நீ கேரட்டாக இருக்கிறாயா? முட்டையைப் போல் இருக்கிறாயா? அல்லது காபி தூள்களைப் போல் உள்ளாயா? அது உன்னைப் பொறுத்தது. எனவே உன்னுடைய மனம் சார்ந்த தடைகளைத் தகர்த்து எறிந்துவிட்டு தன்னம்பிக்கையில் செயல்படு என்று அந்த தாய் தன் மகளுக்கு அறிவுரை வழங்கினார்.இதைக் கேட்டதும் மகளின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. மனம் சார்ந்த தடைகளைத் தகர்த்து எறிந்து மன உறுதியுடன் செயல்பட்டு மகத்தான சாதனைபுரிந்த ஒரு பெண்மணி இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அல்மா சோப்ரா 10 வயதிருக்கும்போது சிறுமூளையில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.நரம்பியல் பிரச்சனையால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்கமுடியாது.கைகளால் பொருட்களை இறுகப் பிடிக்கமுடியாது.அன்றாட வேலைகளைச் செய்துகொள்ள முடியாமல் தவிப்பார்கள்.அல்மா, அமெரிக்காவின் நியூஜெர்சியில் பிறந்தார். பிறந்தபோது இவருக்கு எந்த ஒரு உடல்நலக்குறைவும் இல்லாமல் நலமாகத்தான் பிறந்துள்ளார். நன்றாகப் படிக்கக் கூடியவர், விளையாட்டிலும் சுட்டி. பள்ளியில் இருந்தவர்கள் மத்தியில் அல்மா மிகவும் பிரபலம்.

ஆறு வயதிருக்கும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் பங்கேற்றுள்ளார்.நான்காண்டுகள் வரை தொடர்ந்து இந்த விளையாட்டில் ஈடுபட்டவருக்கு சிறுமூளையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடியபோது என் பள்ளியில் இருந்த ஆசிரியர்களாலோ, மருத்துவர்களாலோ என்னிடம் எந்த ஒரு பிரச்னையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நான் நிற்கும்போது நேராக நிற்காமல் அசைந்துகொண்டே இருந்ததை என் பெற்றோர் கவனித்தனர். இதுதான் என்னுடைய ஆரம்ப அறிகுறியாக இருந்தது என்கிறார் அல்மா.அல்மாவிற்கு ஏற்பட்டிருந்த தீவிரநோய்ப் பாதிப்பைப் பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் நொறுங்கிப்போனார்கள். ஆனால் அல்மா பெரிதாக வருத்தப்படவில்லை. அல்மாவிற்கு மன உறுதி அதிகம்.தன்னுடைய குறைபாடு தன் வாழ்க்கையைப் பெரியளவில் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தார்.இந்த நோய் பாதித்தவர்களின் வாழ்க்கை 18 வயதில் நிரந்தரமாக சக்கர நாற்காலியில் முடங்கிவிடும் என்று சொல்லப்பட்டது.ஆனால் 37 வயதாகியும் இன்னமும் அல்மா அந்த நிலைக்கு செல்லவில்லை,அல்மா ஆரம்பத்தில் தன்னுடைய உடல்நிலை குறித்து நண்பர்களிடம் கூட பகிர்ந்துகொள்ளவில்லை. இளம் வயதில் இதுபோன்ற குறைபாட்டை வெளியில் சொன்னால் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். எல்லோரையும் போல் இல்லாமல் நான் மட்டும் மாறுபட்டவள் என்பது தெரிந்தால் சக நண்பர்களிடமிருந்து விலகி இருக்கவேண்டியிருக்கும் என்பதால் அல்மா யாரிடமும் இந்த நோயை பற்றி சொல்லவில்லை. அல்மா மருத்துவ பரிசோதனைக்கு அடிக்கடி செல்லவேண்டியிருந்தது. அதிக நாட்கள் பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருந்தபோதும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

அதன் பிறகு அல்மா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி வளாகத்திலேயே விடுதியில் தங்கி படிக்கத் தொடங்கினார்.அந்த சமயத்தில் அவரது நோயின் பாதிப்பு தீவிரமடைந்தது.அன்றாட வேலைகளைக்கூட மற்றவர் துணையின்றி செய்துகொள்ள முடியாமல் போனது. அப்படிப்பட்ட சூழலிலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரிப் படிப்பை முடிக்கவேண்டும் என்பதில் அல்மா உறுதியாக இருந்தார்.கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வெவ்வேறு கட்டடங்களில் வகுப்புகள் நடைபெற்றது. இதனால் அல்மாவிற்கு உதவுவதற்காக கல்லூரியில் செக்யூரிட்டி நியமிக்கப்பட்டது.அவர்களுக்கு முன்னரே தகவல் சொல்லிவிட்டால் அல்மாவை வகுப்புகளுக்கு அழைத்து செல்வார்கள்.
செக்யூரிட்டி கிடைக்காத நாட்களில் அல்மா தவழ்ந்துகொண்டே வகுப்பிற்கு சென்றுள்ளார். அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.இவற்றையெல்லாம் அல்மா ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையைத் தானே பார்த்துக் கொள்ள முடிவு செய்தார்.

வகுப்பிற்கு லிஃப்டில் சென்று காரிடர் ஒன்றைக் கடக்கவேண்டும். எல்லோரும் காரிடரில் அமர்ந்துகொண்டும் சுவரில் சாய்ந்துகொண்டும் வகுப்பு தொடங்குவதற்காகக் காத்திருப்பார்கள். நடக்கமுடியாத நிலையில் கைகளையும், கால்களையும் வைத்து தவழ்ந்துகொண்டே வகுப்பிற்கு செல்வார் அல்மா.சிறுமூளை அடாக்சியா என்ற நரம்பியல் நோய் மிகவும் அரிய வகை நோய்.ஒரு மில்லியன் பேரில் ஒருவரை மட்டுமே இந்த நோய் பாதிக்கக்கூடும். அல்மா படித்த கல்லூரியில் அவருக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். கல்லூரி முதலாண்டில் பலர் அல்மாவை கிண்டல் செய்தனர். ஒரு மாணவர் அவரை மிகவும் மோசமாக கிண்டல் செய்தார்.இதனால் அல்மா அழுது விடுகிறார்.இதுபோல் பலர் முகத்திற்கு நேராக எதுவும் சொல்லாமல் முதுகிற்குப் பின்னால் கேலி செய்து உள்ளார்கள். அவற்றை பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக்கொண்டார்.கல்லூரியில் சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் அல்மா மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனிமையில் இருந்தார். மிகுந்த மனவேதனையில் இருந்தார். தனிமை அவரது படைப்பாற்றலை வெளிக்கொண்டு வந்தது.இதனால் கவிதை எழுதத் தொடங்கினார். ஒரு எழுத்தாளராக மற்றும் கவிஞராக உருவானார் அல்மா.பல சமயங்களில் தனிமையில் அமைதியாக அழுதிருக்கிறேன். என்னுடைய மனதில் தேங்கியிருந்த கவலைகளையும் உணர்வுகளையும் வார்த்தை வடிவில் பேப்பருக்கு மாற்றிவிடுவேன். இதுவே எனது கவலைகளுக்கு தீர்வாக அமைந்தது.

இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் படிப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். 2007-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றிய அல்மா இன்று அதே நிறுவனத்தில் மனிதவளத் துறையின் துணைத்தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.தன்னுடைய வாழ்க்கைப் பயணம் மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்பதால் அதை மக்களிடையே பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தார். இன்று அல்மா ஊக்கமளிக்கும் பேச்சாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.மாற்றுத்திறனாளிகள் நல்ல உடல்நிலையில் இருப்பவர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. எல்லோரிடமும் ஒரு சுமை இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் சற்று கூடுதல் சுமையை சுமக்கவேண்டும். அவ்வளவுதான். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கும்.அதை மற்றவர்கள் மதிப்பிட நாம் அனுமதிக்கக்கூடாது,  என்கிறார்  அல்மா.கொடிய நோய் தாக்கிய போதும் மனம் தளராமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார் அல்மா. தற்போது உளவியல், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகியவற்றில் ஹானர்ஸ் டிகிரி முடித்து உள்ளார்.அமெரிக்காவின் மிகச்சிறந்த சட்டக்கல்லூரிகளில் ஒன்றான கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து சாதனை பெண்ணாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.37 வயது அல்மா சோப்ரா இன்று ஊக்கமளிக்கும் பேச்சாளர்,எழுத்தாளர்,மற்றும் வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவராகத் திகழ்கிறார்.வாழ்வில் எப்படிப்பட்ட மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டாலும், அதைத் துணிந்து மன உறுதியுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு அல்மா ஒரு மிகச்சிறந்த உதாரணம். உடலில் குறை இருக்கலாம். ஆனால் நம் மனதில் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அல்மாவின் வாழ்க்கை ஊக்கப்படுத்தும் உன்னத பாடமாகும்.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi