திருவொற்றியூர்: மணலி நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் காயம் அடைந்தார். திண்டிவனத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (43). சென்னையில் தங்கியிருந்து லாரி டிரைவராக உள்ளார். நேற்றிரவு அண்ணாசாலையில் இருந்து மணலி புதுநகர் அருகே கொண்டை கரையில் உள்ள நிறுவனத்தில் சிஎன்ஜி கேஸ் நிரப்புவதற்காக காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்றார். மணலி எம்எஃப் எல் சந்திப்பில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பில் மோதியது.
இந்த விபத்தில், இருக்கையில் சிக்கிய ஜெய்சங்கர் வெளியே வர முடியாமல் தவித்தார். விபத்து காரணமாக போக்குவரத்து பாதித்து பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வந்து, பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்துகிடந்த லாரியை நிமிர்த்தி சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் ஜெய்சங்கரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.