திருவொற்றியூர்: மணலி புதுநகர் பகுதியில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர்கள், வியாபாரிகள் என சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர் பல்வேறு பணிகளுக்காக மாநகர பேருந்தில் பயணித்து உயர் நீதிமன்றம், தங்க சாலை, கோயம்பேடு போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில், மணலி புதுநகரிலிருந்து அதிகாலையில் எழும்பூர் வரை இயக்கப்படும் தடம் எண் 28 ஏ மற்றும் கோயம்பேடு வரை இயக்கப்படும் 121 டி ஆகிய இரு வழித்தட பேருந்துகள் கடந்த கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்டன.
ஆனால் அதன் பின்னர் பல பேருந்துகள் இயக்கப்பட்டாலும் விடியற்காலையில் இயங்கும் இந்த இரு வழித்தட பேருந்து மட்டும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, விடியற்காலையில் அலுவலகம் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் பொதுமக்கள் ஷேர் ஆட்டோ, அல்லது தனி ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மீண்டும் இந்த இரு வழித்தடங்களிலும் பேருந்து இயக்க வேண்டும். தற்போது மணலி புதுநகரிலிருந்து இயங்கும் அனைத்து வழித்தடங்களையும் சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பேருந்து வசதிகள் குறைவாக இருந்தது. இதையடுத்து மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ மற்றும் வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம் ஆகியோரின் முயற்சியால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனாலும் விடியற்காலையில் கோயம்பேடு மற்றும் எழும்பூருக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. எனவே விடியற்காலையில் இந்த இரு வழித்தடங்களையும் இயக்க வேண்டும். மேலும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை திருவொற்றியூர் வழியாக மணலி புதுநகர், மீஞ்சூருக்கு செல்லும் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை கூடுதலாக வேண்டும் என மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்’’ என்றனர்.