திருவொற்றியூர்: சென்னை மணலி பல்ஜிபாளையம் பகுதியில் மாநகராட்சியும் பொது தனியார் கூட்டமைப்பு நிறுவனம் இணைந்து பயோ கேஸ் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை சேகரித்து அதிலிருந்து பயோ கேஸ் தயாரித்து வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வாசலில் கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் கொசுத் தொல்லைகள் அதிகமாகி இரவில் தூங்க முடியாமல் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கழிவுநீரை அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’பயோகேஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல்சிரமப்பட்டு வருகின்றனர். துர்நாற்றமும் வீசுகிறது. மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம்’ என்றனர்.