சென்னை: சென்னை மாநகராட்சி மணலி, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆணையர் குமரகுருபரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மணலி மண்டலம், வார்டு-21 பாடசாலை தெரு சென்னை தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கட்டிட கட்டுமானப் பணியை ஆணையர் குமரகுருபரன் நேற்று பார்வையிட்டு செப்டம்பர் இறுதிக்குள் முடித்திடவும், பள்ளியில் உள்ள கழிப்பிடத்தை சீரமைத்திடவும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு திட்டம் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார். பாட சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பார்வையிட்டு, நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கான மதிப்பீடு தயாரிக்க ஆலோசகரை நியமிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பேருந்து நிலைய பொதுக்கழிப்பிடத்தை ஆய்வு செய்து சுத்தமாக ெதாடர்ந்து பராமரிக்க உத்தரவிட்டார். அந்த பகுதியில் நடந்து வரும் சாலைப் பணிகளை மூன்று வாரங்களில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அம்பேத்கர் தெருவில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். வார்டு-20, காமராஜர் சாலையில் மயானபூமி கட்டுவதற்கான மதிப்பீடு தயாரிக்கவும், வார்டு-18ல் உள்ள மழைநீர் வடிகால்களை பார்வையிட்டு, டி.பி.பி. சாலை மற்றும் சி.பி.சி.எல். சந்திப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பதற்கு ரயில்வே துறையிடம் தடையின்மைச் சான்று பெற்று பணிகளை தொடங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வார்டு-16, 17 மற்றும் 18க்குட்பட்ட எம்.ஆர்.எச் சாலையில் இருந்து சடையங்குப்பம் வரையிலான புழல் உபரி கால்வாயின் கரையை விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து உயர்மட்டக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும், கடப்பாக்கம் ஏரியை பார்வையிட்டு, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான மறுசீரமைக்கும் பணியை ஒரு வாரத்தில் தொடங்கி, திட்டம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார். வார்டு-16ல் கன்னியம்மன் பேட்டை சென்னை தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, பாழடைந்த கட்டிடங்களை இடித்து, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து மேம்பாட்டு பணிகள், விளையாட்டு மைதானம் அமைத்தல், சமையல் கூடம் கட்டுதல், அங்கன்வாடி மையம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்ய அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பர்மா நகர் மயானபூமியை பார்வையிட்டு, அதை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தினார். மணலி ஏரியில் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களின் வார்டு-20 மற்றும் 27க்குட்பட்ட காமராஜர் சாலை மற்றும் மணலி ஏரி சந்திப்பில் கால்வாய் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும், அனைத்து தெரு விளக்குகளுக்கும் வர்ணம் பூசி, பழைய தெரு விளக்கு கம்பத்தை மாற்றி புதிய கம்பங்களை அமைக்க வேண்டும் என்றார். மாதவரம் மண்டலம், மாதவரம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குளத்தின் மேற்குப் பகுதியில் கரையைப் பலப்படுத்திடவும், ஆகாயத்தாமரைகளை அகற்றிடவும், மாதவரம் ஏரியை மேம்படுத்துவதற்கான மீதிப் பணிகளை மேற்கொள்வதற்காக மீன்வளத் துறையிடம் இருந்து நிதி பெற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
வார்டு-27 வெங்கடேஷ்வரா காலனி, முதல் தெருவில் சாலைப் பணிகளைப் பார்வையிட்டு, விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அருள் நகர், கணபதி காலனி பிரதான சாலையில் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு, மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் உள்ள வண்டல்களை முழுவதுமாக தூர்வாரி அகற்றவும் உத்தரவிட்டார். பின்னர், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-37, மத்திய அவென்யூ சாலையில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாயை பார்வையிட்டு, ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட அலுவலர்கள் சென்றனர்.