திருவொற்றியூர்: மணலி விரைவு சாலையில் நின்றிருந்த டிரைலர் லாரி மீது டிப்பர் லாரி மோதியதில், டீசல் டேங்க் வெடித்து 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (46), கன்டெய்னர் லாரி டிரைவர். இவர், நேற்று அதிகாலை மணலியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு டிரைலர் லாரியுடன் சென்றார். மணலி விரைவு சாலையில், சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே சென்றபோது, இயற்கை உபாதை கழிக்க, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் லாரியை எடுக்க முயன்றார். அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென இவரது டிரைலர் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் டிப்பர் லாரியின் டீசல் டேங்க் வெடித்து, தீப்பிடித்தது. உடனே அந்த லாரியில் இருந்த மயிலாடுதுறையை சேர்ந்த லாரி டிரைவர் ஜீவானந்தம் (48) கீழே குதித்து தப்பினார். சிறிது நேரத்தில் 2 லாரிகளும் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து மணலி, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 2 லாரிகளிலும் பற்றிய தீயை 2 மணி நேரம் போராடி அணைத்தனர். ஆனால், அதற்குள் 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து நாசமனது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் சுந்தரமூர்த்தி, ஜீவானந்தம் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.