திருவொற்றியூர்: மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் 10 நாள் புரட்டாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முன்னதாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக்கொடியை அய்யாவின் பக்தர்கள் கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும், கொடிமரத்தை 5 முறையும் ‘அய்யா ஹரஹர சிவ’ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர். பின்னர் பதிவலம் வந்து, காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது.
இதை தொடர்ந்து பால் பணிவிடை, உகப்படிப்பும் இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வந்தார். திருவிழா நாட்களில் நாள்தோறும் மாலை திருஏடு வாசிப்பு நடக்கிறது. மேலும், நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், இந்திர வாகனம், பூம்பல்லக்கு வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.
விழாவின் 8வது நாளான 13ம்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 9 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணியளவில் அய்யா திருத்தேரில் வீதியுலா வருகிறார். தேரோட்டத்தை தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை, ஞானதிரவியம் எம்பி, திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் செல்வராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ.சுவாமிநாதன், பொருளாளர் பி.ஜெயக்கொடி, நிர்வாகிகள் டி.ஐவென்ஸ், வி.சுந்தரேசன், கே.ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும், விழா நாட்களில் பக்தர்கள் சென்றுவர மாநகர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம், நவீன கழிப்பறை, உணவு வசதி போன்றவை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.