கேரளாவில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக மல்லு இந்து ஆபீசர்ஸ் என்ற வாட்ஸ் ஆப் குரூப் தொடங்கி சிக்கலில் சிக்கியிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், கேரள ஐஏஎஸ் அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன். திறமைசாலி, மெத்த படித்தவர் என்றாலும், அவரது செயலால் தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கிறார். நாமக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் கோபாலகிருஷ்ணன். 2013ம் ஆண்டு கேரளா பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். கேரளாவில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்த இவர், தற்போது கேரளா தொழில்துறை செயலாளராக உள்ளார்.
சமீபத்தில் இவர் மல்லு இந்து ஆபீசர்ஸ் என்ற வாட்ஸ்ஆப் குழுவை ஆரம்பித்தார். இதில் இந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை சேர்த்தார். இந்த நடவடிக்கை கடும் சர்ச்சைக்குள்ளானது. எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து தனது செல்போன் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், அதன் அடிப்படையில் தனக்கு தெரியாமல் செல்போனில் உள்ள நம்பர்களை வைத்து வாட்ஸ்ஆப் குழு தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய தடயவியல் சோதனையில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதுதொடர்பாக அறிக்கையை கேரளா தலைமை செயலாளர் சாரதா முரளீதரன் அரசுக்கு அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது கோபாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதே போல் கேரளா வேளாண் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலர் என். பிரசாந்த் ஐஏஎஸ் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான மற்றொரு அதிகாரி. தனக்கு மூத்த அதிகாரி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின் பேரில் ஒரே நேரத்தில் கேரளாவில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிலும் குறிப்பாக 2007ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான என் பிரசாந்த், கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ.ஜெயதிலக் மீது முகநூல் பதிவில் குற்றம் சாட்டியதோடு, அவரை ஒரு மனநோயாளி என வர்ணித்தார். பிரசாந்த் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக பணியாற்றக்கூடியவர். கலெக்டர் புரோ என்று ேகாழிக்கோடு மாவட்ட மக்கள் மட்டுமல்ல, கேரள மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறவர். ஆனால் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது இவ்வாறு பொதுவெளியில் விமர்சனம் செய்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அரசு அதிகாரிகள் பணியில் இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆட்சிகள் மாறும், காட்சிகள் மாறும். ஆனால் அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும் வரை பணியில் இருப்பவர்கள். சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரையும் சமமாக கருதவேண்டும். அப்போது தான் ஆட்சி நிர்வாகம் திறம்பட செய்படும். அரசில் இருப்பவர் பிறப்பிக்கும் உத்தரவுகளை எந்தவித பாகுபாடும் இல்லாமல், மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு நிறைவேற்ற முடியும்.
ஆனால் மத அடிப்படையில் பிரிந்து செயல்படுவதும், மூத்த அதிகாரிகள் மீது உரிய மரியாதை இல்லாமலும், அவர்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் பொதுவெளியிலும், சமூக ஊடக தளத்திலும் விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பணித்தளத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதை உரிய முறையில் சமரசமாக தீர்க்க வேண்டும். அதை விடுத்து சமூக தளத்தில் விமர்சனம் செய்வது நிர்வாகத்தை சீர்கெடுத்துவிடும். அரசுக்கு அச்சாணி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள். எனவே அவர்கள் அரசு நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது கேரளா மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் மிகவும் முக்கியம்.