ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் (26). இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் தொழிற்சாலை உற்பத்தி பாகங்கள் சேமித்து வைக்கும் குடோனில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிற்சாலையின் மேற்கூரை அமைக்கும் பணியில் உதவியாக வேலை செய்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மேற்கூறையில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அஜித்தை மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அஜித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.