பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த அய்யப்பன்தாங்கல் சின்ன கொளுத்துவான்சேரி பகுதியை சேர்ந்தவர் ரவி (எ) இமானுவேல்(32). இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம், ஒரு லட்சம், 2 லட்சம், 3 லட்சம் என்று மாதம் தோறும் ஏலச்சீட்டு மற்றும் பண்டு நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்களுக்கு ரவி பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் பணம் கட்டியவர்கள் பணத்தை கேட்கும் போதெல்லாம் கொடுப்பதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் பணம் தராமல் ஏமாற்றி வந்த ரவியை பிடித்து நேற்று போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், ரவி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஏமாற்றப்பட்ட பணம் ரூ.50 லட்சத்திற்கு மேல் வருவதால், வழக்கை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்ற போரூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.