மேட்டூர், ஜூலை 31: மேட்டூர் அருகே தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்த சீராமைதீன் மனைவி கத்திசா (73). நேற்று முன்தினம் மாலை, கத்திசா தனது பேரன் அப்பாஸ் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், கத்திசாவின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றார். கத்திசா சப்தமிடவே பொதுமக்கள் அவரை விரட்டினர். அப்போது தப்பி ஓட முயன்ற வாலிபர், கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார், வாலிபரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பொன்னாச்சியை சேர்ந்த நாகராஜூ(26) என்பதும், அவர் கல் உடைக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.