*பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கை.களத்துரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த வேலுசாமி மகன் வேல்முருகன் (27) என்பவர் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார். கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததில் அவர் கர்ப்பமாக்கி உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தையின் உயிரியல் தந்தை வேல்முருகன் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கு அந்த காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக பலமுறை பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக வேல்முருகனுக்கு 20 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.
அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்ததுடன் அபராதம் கட்டத் தவறினால், மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும், மேற்கண்ட அபராதத் தொகையில் ரூ.1 லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், தமிழக அரசு ரூ.3 லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வேல்முருகனை போலீசார் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைத்தனர்.