*அழுகிய நிலையில் உடலை மீட்டு போலீஸ் விசாரணை
கோவை : கோவை வெள்ளலூர் பஸ் நிலையத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் கொலை செய்யப்பட்டார். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை போத்தனூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் பஸ் நிலையம் கட்டப்பட்டு வந்தது. பின்னர், அந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடிப்பதும், பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காலை நேரங்களில் பஸ் நிலையம் பகுதியில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பொதுமக்கள் வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த ஒரு சிலர் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என தேடி பார்த்தனர். அப்போது, பஸ் நிலைய கட்டிடத்தின் மறைவான பகுதியில் அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மேலும், மோப்ப நாயையும் வரவழைத்தனர். தொடர்ந்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலை செய்யப்பட்ட ஆணின் சடலம் அருகே இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதையடுத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட ஆண் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? அவர் கொலை செய்யப்பட்டு பஸ் நிலையம் பகுதியில் தூக்கி வீசி சென்றார்களா? அல்லது பஸ் நிலையம் பகுதிக்கு அழைத்து வந்து கை, கால்களை கட்டி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு நேரில் வந்து துணை கமிஷனர் உதயகுமார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் தனிப்படை அமைத்து கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை கண்டறிந்து, கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
எப்போது நடந்தது?
கொலை குறித்து போலீசார் கூறுகையில்,“கொலை செய்யப்பட்டவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இதனால், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் கடந்த ஒரு வாரத்தில் பதிவான கட்சிகளை கைப்பற்றி வருகிறோம். மேலும், கொலை செய்யப்பட்டவரின் உடலில் பலத்த காயங்கள் உள்ளன.
ஆனால், உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் எது போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும். அதேபோல், அந்த பகுதியில் அதிக நாய்கள் இருப்பதால் நாய்களும் உடலை கடித்து குதறி இருக்கும். அதனாலும் உடலில் அதிகளவில் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.