*தப்பியோடிய 3 பேருக்கு வலை
ஓசூர் : ஓசூர் அருகே, மாநில எல்லையில் 9 மான்கள், ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடி, விற்பனை செய்வதற்காக காரில் எடுத்து சென்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு வனப்பகுதி வன பாதுகாவலர் ரவீந்திரகுமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி வனபாதுகாவலர் கணேஷ், கக்கலிப்புறா வன அலுவலர் காம்ப்ளே தலைமையில் வனப்பணியாளர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான சீகலஅள்ளி பகுதியில், மான்களை விற்பனைக்காக விலை பேசி கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, 3 பேர் தப்பியோடிய நிலையில், ஒருவர் வனத்துறையினரிடம் சிக்கினார். விசாரணையில், பிடிபட்டவர் கர்நாடக மாநிலம், குப்பலாளா கிராமத்தை சேர்ந்த பிரதாப்(30)என்பது தெரியவந்தது.
மேலும், அவரது நண்பர்களான பால்ராஜ், பீமப்பா, ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து, கர்நாடக மாநிலம் மாலூர் அடுத்துள்ள கோலார் பகுதியில் உள்ள சின்னப்பள்ளி அமணிகெரே என்ற வனப்பகுதியில், வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டதும், 9 மான்கள் மற்றும் ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. அதை விற்பனை செய்வதற்காக 2 கார்களில் சீகலஅள்ளிக்கு கொண்டு சென்ற போது, வனத்துறையினரிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து, பிரதாப்பை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான பால்ராஜ், பீமப்பா, ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். பால்ராஜ் மீது கர்நாடகாவில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், வேட்டைக்காக பயன்படுத்திய 2 கார்கள், ஒரு டூவீலரை பறிமுதல் செய்து, வேட்டையாடிய 9 மான்கள், காட்டுப்பன்றியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.