நன்றி குங்குமம் டாக்டர்
பிரேமலு திரைப்படம் கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் சக்கப்போடு போட்டது. அதில் நடித்த க்யூட் நாயகி மமிதா பைஜூ கேரளத் திரையுலகிலிருந்து புறப்பட்டு தமிழ் சினிமாவிலும் தனது நடிப்பால் தனித்த அடையாளம் பதிந்துள்ளார். மலையாளத் திரையுலகில் தனது அழகும் திறமையும் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற மமிதா பைஜு, தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். 2024ல் ஜி.வி. பிரகாஷுடன் நடித்த “ரிபெல்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் “சாரா மேரி ஜான்” என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றார்.
அதன்பின், “டூட்” எனும் காமெடி-டிராமா படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்துள்ளார். சூர்யா 46” திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணையும் வாய்ப்பு கிடைத்திருப்பது, அவரது வளர்ச்சிக்கு முக்கிய கட்டமாக உள்ளது. இது 2026ல் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் பட இயக்குனர் இயக்கும் “இரண்டு வானம்”, விஜயின் “ஜனநாயகன்” ஆகிய படங்களிலும் மமிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பு திறமை, எளிமையான நடத்தை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்துவரும் நடிகையாக, தமிழ் திரையுலகில் மமிதா பைஜு ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார். முன்னணி நடிகைகளில் ஒருவராக வளரும் மமிதா, எதிர்காலத்தில் தமிழ் திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மமிதா பைஜுவின் ஃபிட்னெஸ் பற்றி தெரிந்துகொள்வோம். ‘‘எனக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் அதிகம். குசிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் நுட்பப் பயிற்சிகள் பற்றி தெரியும். இதுதான் என்னுடைய உடல் கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மைக்குத் தொடக்கமாக அமைந்தது. இப்போது, ஒரு முழுமையான உடற்பயிற்சி நெறியில் பயணித்து வருகிறேன். என்னுடைய ஜிம் பயிற்சிகள், சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்படுகின்றன.
என்னை பொருத்தவரையில் “Stay Active, Be Healthy” என்பது என்னுடைய வாழ்வுரையாகக் கருதலாம். வாரத்தில் குறைந்தது 4 முதல் 5 நாட்கள் வரை ஜிம்மில் பயிற்சி மேற்கொள்கிறேன். ஸ்குவாட், டெட் லிஃப்ட், புஷ்-அப், கார்டியோ, பிளாங்க் போன்ற பல்வேறு பயிற்சிகளும், அதன் பிறகு செய்யும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளும், என்னுடைய உடலை வலுவானதாகவும், சுறுசுறுப்பானதாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நான் பகிரும் பயிற்சி வீடியோக்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, 2024இல் அவர் பகிர்ந்த “Leg Day” பயிற்சி வீடியோ என்னுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது உடல்தகுதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.நானும் என்னுடைய தோழி அன்னா பென்னும் சேர்ந்து பயிற்சி செய்த வீடியோ YouTube-இல் வெளியிட்டோம். இந்த ஜிம் பயிற்சி வீடியோவும், பெண்கள் உடற்பயிற்சி செய்வது எப்படி என்ற புதிய பார்வையை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல், உடல் நிலைக்கும், தன்னம்பிக்கைக்கும் முக்கிய காரணமாக இருக்கும் உடற்பயிற்சி விஷயத்தில் நான் காட்டும் உறுதி, இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறது.
உடல் ஆரோக்கியம்தான் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படை என நான் உறுதியாக நம்புகிறேன். இதில்தான் எனது வாழ்வியல் வெற்றி ஒளிந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்வது எளிதல்ல சரியான முறையில் டயட் இருப்பதுதான் முக்கியம். அதை நான் சரியாக ஃபாலோ செய்வேன். எனக்கு பாரம்பரிய தென்னிந்திய உணவுகள் மீது ஒரு தனிப்பட்ட விருப்பம் உள்ளது. தோசை மற்றும் இட்லி ஆகியவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவை ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளாகவும், அதிகப்படியான எண்ணெய் இல்லாதவையாகவும் இருப்பதால், ஒரு டயட் பின்பற்றும் நபருக்கு ஏற்றவை.
அதன் பிறகு, சிக்கன் கிரேவி போன்ற புரதம் நிறைந்த உணவுகளும் என்னுடைய விருப்ப உணவில் அடங்கும். இது உடல் வளர்ச்சிக்கும், தசைகளுக்கு தேவையான புரதத்தையும் வழங்குகிறது. எனக்குப் பிடித்த பானங்களில் மேங்கோ ஃப்ரூட்டி (மாம்பழ ஜூஸ்) ரொம்பவே ஸ்பெஷல். இது இயற்கையான இனிமை மற்றும் சுறுசுறுப்பை வழங்கக்கூடிய உணவு முறையாக உள்ளது’’ என்கிறார் மமிதா பைஜூ.
இன்றைய திரையுலக சூழலில், வெளிப்படையான உடல்குறையீடுகளோ, பரிமாணக் கட்டுப்பாடுகளோ இல்லாமல், உடல்நலம் ஆகியவற்றை முன்னிறுத்தும் ஒரு நடிகையாக மமிதா பைஜு திகழ்கிறார். அவர் காட்டும் வாழ்வியல் முறைகள், பலருக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் இருக்கிறது. இவ்வாறு, தனது திறமைக்கும், உழைப்புக்கும், உடல்நலத்திற்கும் சமமாக முக்கியத்துவம் அளித்து நடிப்பையும், ஆரோக்கியத்தையும் இணைத்துப் பார்ப்பவர் என்ற வகையில், மமிதா பைஜு இளம் தலைமுறைக்கு மிகச் சிறந்த முன்னோடியாகத் திகழ்கிறார்.
தொகுப்பு: சுரேந்திரன்