ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாம்பாக்கம் அரசுப்பள்ளி வளாகத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர் தலைமையில் நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 10க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முகாமில் மாம்பாக்கம், போந்தூர், பிள்ளைப்பாக்கம், வடமங்கலம் மற்றும் கிளாய் ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், பட்டா உட்பிரிவு செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், சேர்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுக்களை வழங்கினர். இதில், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, பாலாஜி, திமுக ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.