திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கத்தில் தெய்வநாயகி சமேத முருக நாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கடந்த ஆண்டு பாலாலயம் நடைபெற்று திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் பல்வேறு உபயதாரர்கள் ராஜகோபுரம், மூலவர் விமானம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளை புதுப்பித்து வண்ணம் பூச உதவி செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலை பூஜை, கணபதி பூஜை, யாகங்கள் நடத்தப்பட்டு நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் காயத்ரி அன்புச்செழியன், ஒன்றியக்குழு உறுப்பினர் அருண்குமார், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.