கொல்கத்தா: பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 40,000 துர்கா பூஜை குழுக்களுக்கு தலா ரூ.1.10 லட்சம் மானியம் அரசு வழங்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது குறித்து பாஜ விமர்சித்துள்ளது. மேற்கு வங்க பாஜ எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கூறுகையில்,‘‘கோயில்களைக் கட்டுவதும், பூஜைக்கு மானியங்கள் வழங்குவதும் ஒரு அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க முடியாது. நன்கொடைகளை வழங்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு வளர்ச்சியைப் புறக்கணிக்கிறது.
இது அரசாங்கம் தனது முன்னுரிமைகளை மாற்றிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. சாலைகள் அமைப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பதிலாக, மம்தா பானர்ஜி மத அரசியலில் மும்முரமாக இருக்கிறார். ’மதத்தை பொருட்படுத்தாமல், கல்வித் துறையை மேம்படுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் மேம்படுத்துவதை பாஜ கட்சி ஆதரிக்கிறது என்றார்.


