பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து இருக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரையே குறிவைத்து பா.ஜ. அரசியல் செய்தது. மம்தா பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே எழுந்து இருக்கிறது. பொறுத்துப்பார்த்தார் மம்தா. தனக்கு உள்ள அதிகாரத்தை கையில் எடுத்து மாநில சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி தூக்குத்தண்டனை என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து அசத்தி இருக்கிறார்.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த பெண் மருத்துவர் ஆக.9ம் தேதி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்யக்கோரி டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கும் நெருக்கடி. ஆனால் கொல்கத்தா போலீசார் திறமையாக செயல்பட்டு அடுத்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி சஞ்சய்ராயை கைது செய்துவிட்டார்கள்.
அவர்தான் குற்றவாளி என்பது சிசிடிவி காட்சிகள் மூலமும், கொலை நடந்த இடத்தில் கிடைத்த புளூடூத் ஹெட்செட் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், வேறுவழியின்றி சிபிஐ விசாரணை கேட்டு போராட்டங்களை முன்னெடுத்தது பா.ஜ. ஆக.18 வரை அவகாசம் கொடுத்தால் வழக்கு விசாரணையையே முடித்துவிடுகிறோம். இருப்பினும் சிபிஐ வசம் ஒப்படைத்தாலும் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றார் முதல்வர் மம்தா. ஆனால் ஆக.13ல் வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை எந்தவித முன்னேற்றமும் இல்லை.
தற்போது ஆர்ஜி கர் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப்கோஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கல்லூரியில் அவரது பதவிக்காலத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் தான் சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தொடர்ந்து 15 நாள் அவரை இரவு, பகலாக விசாரித்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் எடுத்த நடவடிக்கை இது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவால் பா.ஜ.வுக்கு அரசியல் வேகம் பிடித்தது. மம்தா ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோஷம், பாஜ ஆளும் மாநிலங்களில் வலுத்தது. பொறுமையை கடைபிடித்த மம்தா, பலாத்கார வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் எழுதிப்பார்த்தார்.
ஆனால் பதில் இல்லை. பொறுத்தது போதும் என்று பொங்கி விட்டார். தனக்கு உள்ள அதிகாரத்தை கொண்டு மேற்குவங்க மாநிலத்தில் தற்போது அந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்களின் செயல்களால், பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தாலோ அல்லது உடல் ரீதியாக முடக்கப்பட்டாலோ, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியும். மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து இந்த மசோதா சட்ட வடிவம் பெறும். இப்போது பந்து மம்தா வசம். ‘சிபிஐயிடம் இருந்து எங்களுக்கு நீதிவேண்டும். குற்றவாளிகளை சிபிஐ தூக்கிலிட வேண்டும்’ என்று முழங்கியிருக்கிறார் மம்தா.