புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளையராஜா- நவநீதா தம்பதி. இவர்களின் குழந்தைகள் ரிக்ஷனா, சுதிக்சனுக்கு காதணி விழா நேற்று மாங்காடு முத்துமாரியம்மன் கோயிலில் நடந்தது. இதைமுன்னிட்டு குழந்தைகளின் தாய் மாமன்கள் அனவயல் ஆண்டவராயபுரம் நவீன் சுந்தர், மற்றும் நவசீலன் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் சீர் வரிசைகளை கொண்டு வந்தனர்.
ஊர்வலத்தில் மாட்டு வண்டிகள் அணிவகுக்க, செண்டை மேளம் முழங்க, பெண்கள் இனிப்பு பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை தாம்பூல தட்டுகளில் ஏந்தியபடியும், ஆண்கள் ஆடு, சைக்கிள், பைக் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கோயில் மண்டபத்திற்கு வந்தனர். ேகாயிலுக்கு வந்தவுடன் அந்த பகுதியே அதிரும் வகையில் பட்டாசுகளை வெடித்தனர். இதன்பின் காதணி விழா கோலாகலமாக நடைபெற்றது.
குழந்தைகளின் தாய் வழி தாத்தா மாயழகு கடந்த காலத்தில் மாட்டு வண்டி ஓட்டி விவசாயம் செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் மகள், மகன்களை படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்திருக்கிறார். தங்களது தந்தையின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த மாட்டு வண்டியின் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவும், தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கவும் மாட்டு வண்டியில் சீர்கொண்டு வந்ததாக குழந்தைகளின் தாய் மாமன்கள் நெகிழ்சியுடன் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.