சென்னை: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 4 நாட்கள் நடந்த சர்வதேச காற்றாடி விடும் திருவிழாவில், பல வண்ண வடிவங்களில், ராட்சத காற்றாடிகள் விடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த திருவிழா நேற்று மாலை நிறைவு பெற்றது. உலகளவில் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் காற்றாடி விடும் திருவிழாவை நடத்தி, பார்வையாளர்களை மகிழ்விப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், பார்வையாளர்களை மகிழ்விக்க கடந்த 2022ம் ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி விடும் திருவிழாவை 3 நாட்கள் நடத்தியது.
அதேபோல், இந்தாண்டு காற்றாடி திருவிழா 3வது முறையாக மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 15ம் தேதி தொடங்கி, நேற்று மாலை நிறைவு பெற்றது. இதில், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 45க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தேசியக் கொடி, கரடி, புலி, ஆக்டோபஸ், பாம்பு, கதக்களி, சூப்பர்மேன், டிராகன், ஜல்லிக்கட்டு காளை, சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பல வண்ண வடிவங்களில் காற்றாடிகளை பறக்க விட்டு பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து மகிழ்வித்தனர்.
இந்த, காற்றாடி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து, காற்றாடி பறப்பதை தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். காற்றாடி விடும் திருவிழாவை காண வந்த பார்வையாளர்களால் வளாகம் களைகட்டி காணப்பட்டது. காற்றாடி திருவிழாவின் கடைசி நாளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.