மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே எச்சூர் பகுதியில், தினகரன் நாளிதழ் எதிரொலியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்தனர்.மாமல்லபுரம் அடுத்த, எச்சூர் ஆதிதிராவிடர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், எச்சூர் ஆதிதிராவிடர் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டது.
இப்பகுதியில், அதிகமான மின் இணைப்புகள் இருப்பதாலும், அதற்கேற்றவாறு டிரான்ஸ்பார்மர் இல்லாததாலும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் வீட்டு மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும், விவசாயிகள் கிணறு மற்றும் போர்வெல் மூலமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் இறைக்க முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். குறைந்த மின்னழுத்தம் குறித்து எச்சூர் ஊராட்சி துணை தலைவர் கோவிந்தசாமி பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்தும், செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் கண்டும் காணாதது போல் அலட்சியமாக செயல்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
எனவே, பழைய டிரான்ஸ்பார்மரை அகற்றி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, கடந்த 23ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது. இதையடுத்து, மானாம்பதி மின் வாரிய அதிகாரிகள் நேற்று நேரில் வந்து ஆய்வு செய்து, மின் பணியாளர்கள் மூலம் பழைய டிரான்ஸ்பார்மரை அகற்றி புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்தனர். இதனால், பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், மின் வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.