மாமல்லபுரம்: மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க விடாமல், நடுக்கடலில் லாஞ்சரில் வந்து ஒருசிலர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதி மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் நாசமாகிவிட்டன. இவற்றை தடுக்க கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளான திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி என 14 மாவட்டங்களை உள்ளடக்கி மொத்தம் 1076 கிமீ தூரத்துக்கு 15 பெரிய துறைமுகங்களை கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக 2வது நீளமான கடற்கரையை தமிழகம் கொண்டிருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தமிழக கடற்கரை பகுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் நாட்டுப் படகு, விசைப் படகுகளே இருந்தன. தற்போது, அனைத்து மீனவர்களும் விசை படகு, கட்டுமரம், சின்ன படகு, சுசுகி படகு, லாஞ்சர் உள்பட பல்வேறு வகையான படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் சுற்றுவட்டார மீனவ பகுதிகளான மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி குப்பம், சாலவான்குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு குப்பம், நெம்மேலி குப்பம், வடநெம்மேலி குப்பம், புதிய கல்பாக்கம், புதிய எடையூர் குப்பம் உள்பட பல்வேறு மீனவ பகுதிகளில் வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் 50 முதல் 100 கிமீ தூரம் செல்லும் விசைப்படகு, சிறிய வகை படகு, 15 முதல் 20 கிமீ தூரத்துக்கு சிறிய படகுகளில் நடுக்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
எனினும், கடந்த சில மாதங்களாக மாமல்லபுரம் மீனவர்களை நடுக்கடலில் வைத்து லாஞ்சர்களில் மீனவர்களின் ஒருசிலர் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீனவர்களின் வலைகளையும் நாசப்படுத்திவிட்டு, இப்பகுதி மீனவர்கள் பிடித்த மீன்களையும் அள்ளி செல்கின்றனர். மேலும், மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் சிறிய படகுகளில் நடுக்கடலுக்குள் மீன்பிடிப்பதற்கும் லாஞ்சரில் வருபவர்கள் தடை விதிக்கின்றனர். இதனால் மாமல்லபுரம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் சிறிய படகுகளும் மீன்பிடி வலைகளும் பலத்த சேதமாகி வருகின்றன. இதனால் சிறிய படகுகளில் செல்லும் மீனவர்கள் கடலுக்குள் குதித்து உயிர் தப்பி கரை சேரும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.
மேலும், கடல் கொள்ளையரை போல் லாஞ்சரில் வரும் மீனவர்களின் தாக்குதலுக்கு பயந்து, இப்பகுதி மீனவர்கள் கரையோரத்தில் நின்றபடி மீன்பிடிக்கும் அவலநிலையும் நீடித்து வருகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படை போலீசாருக்கு பலமுறை புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, இப்பிரச்னை குறித்து தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.