மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே காப்புக் காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட காப்புக்காடு உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் இந்த காப்பு காட்டின் ஒரு பகுதியில் திடீரென தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால், காப்பு காட்டின் அருகில் கடம்பாடி, மேலக்குப்பம், எடையூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து, தகவலறிந்த கடம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார் மாமல்லபுரம் தீயணைப்புத்துறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, முதன்மை தீயணைப்பு வீரர்கள் வெங்கட கிருஷ்ணன், ரமேஷ் பாபு மற்றும் 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த, திடீர் தீ விபத்தால், காப்பு காட்டின் ஒரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இந்த, திடீர் தீ விபத்தில் கடம்பாடி சுற்றுவட்டார பகுதியில் கரும் புகை மூட்டமாக காணப்பட்டது.