சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். வகுப்புகளில் வெளிமாநிலத்தில் இயங்கும் குளோபல் அகாடமி போன்ற பல்வேறு சேர்க்கை மையங்கள் வாயிலாக நேரடியாக தேர்வு எழுத அனுமதிப்பதாக (வகுப்புகளுக்கு வராமல் சேர்க்கை செய்து) பல்கலைக்கழக மானியக்குழுவில் இருந்து புகார் மனு பெறப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக கேரளமாநில போலீசில் அந்த அகடாமி மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கல்லூரி முதல்வர்கள், செயலாளர்கள் இதுபோன்ற பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது. இதுபோல் தவறான முறையில் மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும் கல்லூரிகளின் மீது முன்னறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய வழிமுறைகளை பின்பற்றி, கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.